வெள்ளி, 16 செப்டம்பர், 2016

CPS வல்லுநர் குழு அரசின் திட்டமிட்ட சதி

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்பட கிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து வாசிக்க →
 •  Facebook
 •  Twitter
 •  Google+
 •  Stumble
 •  Digg

வியாழன், 15 செப்டம்பர், 2016

CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு

வல்லுநர் குழு _ சந்திப்பு குறித்த பதிவு.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர் பங்கு பெற்றனர்.

பிரிஜேஸ் புரோகித் கலந்து கொள்ளவில்லை.

குழுவின் கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.

என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.

Cps ஒழிய ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

தொடர்ந்து வாசிக்க →
 •  Facebook
 •  Twitter
 •  Google+
 •  Stumble
 •  Digg

காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் முழு அடைப்பு: தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்பு

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும், நாளை நடைபெற வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வாகன சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை (16-ம் தேதி) முழு கடையடைப்பு, ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, ஈரோடு தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சிகள் முழு ஆதரவு: கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோரும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்கள் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்பர் என்றும் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிகவும், ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளன. 'தமிழகம் முழுவதும் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் ஒன்றரை லட்சம் முகவர்களும் தங்களது பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டும் அடைத்து போராட்டத்தில் கலந்துகொள்வர்' என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார். ரயில், பேருந்துகள் ஓடும்: அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடையடைப்பு போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக் காது. தமிழகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் அரசு பேருந்துகளையும் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்துள்ளோம். போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளோம்" என்றார். தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால், ரயில் சேவை பாதிக்காது. பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸாரிடம் கேட்டுள்ளோம்" என்றார். அரசுப் பள்ளிகளில் தேர்வு நடக்கும்: தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்" என்றார். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்: காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், "சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து வாசிக்க →
 •  Facebook
 •  Twitter
 •  Google+
 •  Stumble
 •  Digg

முழு அடைப்பு எதிரொலி:நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார். நாளைக்கு பதில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க →
 •  Facebook
 •  Twitter
 •  Google+
 •  Stumble
 •  Digg

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது. இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து வாசிக்க →
 •  Facebook
 •  Twitter
 •  Google+
 •  Stumble
 •  Digg
 • EL RULES
 • CPS NEWS
 • EMIS LOGIN CLICK HERE
 • Feed your Aadhaar Number
 • வேண்டுகோள்

  கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
  [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

  தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

  இயக்குவது Blogger.

  மொத்தப் பக்கக்காட்சிகள்

  Follow by Email